கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபர் முருகேசம்பிள்ளை பரஞ்சோதி (SLEAS) அவர்களின் மறைவு குறித்து கலாசாலைச் சமூகம் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புகழ் பூத்த அதிபர்களுள் ஒருவராக விளங்கிய மு.பரஞ்சோதி அவர்கள் 09.02.2026 அன்று அமரத்துவம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து துயருறுகின்றோம். 04.06.1947 இல் காரைநகர் தங்கோடையில் முருகேசம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதியரின் மகனாகப் பிறந்த இவர், கணிதத்துறைப் பட்டதாரி ஆவார். 01.07.1983 இல் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில விரிவுரையாளராக நியமனம் பெற்ற இவர் அங்கு கடமையாற்றும் போது இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டார். 01.09.1991 தொடக்கம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளராகவும் 21.05.1998 தொடக்கம் 23.01.2002 வரையான காலப்பகுதியில் அதிபராகவும் அதனைத் தொடர்ந்து மீண்டும் விரிவுரையாளராகவும் பணியாற்றி 2008 இல் ஓய்வு பெற்றார். கலாசாலை மீது கொண்ட பற்றினால் உந்தப்பட்டு கலாசாலைச் சமூகத்தவர்களைக் காண்பதில் ஆனந்தம் கொண்டிருந்தார்.
